சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள பிளவுகளுக்கு இடையே அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகதலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில், தவெக அரசுக்கு ஆதரவு வழங்கும் விவகாரத்தில்  விரிசல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக   எடப்பாடி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

முன்னதாக கட்சி அலுவலகம் வந்த எடப்பாடி பழனிச்சமி  அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பேசி முடிவுக்கு வரலாம் என எடப்பாடி பழனிச்சாமி சண்முகம் தரப்பிற்கு அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் யார்? மற்றும் கொறடா யார் உள்ளிட்டவை குறித்து தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிய உள்ளனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள கருத்து மோதல் பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்ளலாமா இல்லை பொதுக்குழு கூட்டி தீர்க்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளனர். தனிபெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான 22 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், அதிமுகவின் தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே சி.வி.சண்முகம் தரப்பில் 25 எம்.எல்.ஏக்கள் திடீரென ஆதரவளித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.

இருதரப்பிலும் சட்டப்பேரவைக் குழுத்தலைவர், கொறடா நியமிப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தங்கள் தரப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று அவைத்தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி அதற்குப் பதிலாக 26 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்ட எஸ்.பி.வேலுமணி தரப்பு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. அதிமுகவில் சுமார் 2,400 பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், கட்சி விதிகளிபடி, 5-இல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையில் எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்தக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் பதவி தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]