டெல்லி: “ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்து உள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), குடியிருப்பாளர்கள் தங்கள் மக்கள் தொகையியல் விவரங்களையும் அதற்கான துணை ஆவணங்களையும் இணையவழியில், முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்கிறது. இந்த இலவசச் சேவையானது, UIDAI-இன் அதிகாரப்பூர்வ ‘myAadhaar’ இணையதளத்தில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கிறது.

ஆதார் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண் அல்லது அட்டை வைத்திருப்போர் பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றின் சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

அதுபோல, குழந்தை வளரும்போது, அவர்களின் கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங்கள் மாறுவதால், இந்தப் புதுப்பிப்புகள் அவசியம். பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் என அனைத்து விவரங்களையும் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்தை அணுக வேண்டும்.

இந்த நிலையில், ஒருவர் தனது முகவரியை மாற்றவதற்கு https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆவணத்தைப் பதிவேற்றம் செய்து புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் விவரங்களை கட்டணமின்றி இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் முன்னதாக வழங்கப்பட்டிருந்த நிலையில், வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவித கட்டணமும் இன்றி தங்களின் விவரங்களை இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் தகவல்களை புதுப்பிக்க  ‘Aadhaar’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த ‘mAadhaar’ செயலி விரைவில் நிறுத்தப்பட உள்ள நிலையில், புதிய ஆதார் செயலியில்  க்யூஆர் குறியீடு(QR Code) மூலம் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]