பத்து ரூபா மேட்டர்… ருசி கண்ட பூனைகள் விடுமா?
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
20 ஆண்டுகளுக்கு முன்பு டேமேஜ் பாட்டில் கணக்கை சரி செய்ய, பீரை கூலிங்காய் கொடுக்க பிரிட்ஜ் செலவு போன்றவற்றிற்காக டாஸ்மாக் கடை ஊழியர்கள் இரண்டு ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்க ஆரம்பித்தார்கள்.
வாடிக்கையாளர்கள் கேட்டபோது, ரொம்ப ரொம்ப குறைவான சம்பளத்தில் வேலை செய்வதால் வேறு வழி இல்லை என்றார்கள். அந்த ரெண்டு ரூபாயைக் கூட தயங்கி தயங்கித்தான் டாஸ்மாக் ஊழியர்கள் எடுத்தார்கள். சில இடங்களில் நீங்கள் இஷ்டப்பட்டால் மட்டும் கொடுங்கள் என்று கேட்கும் அளவுக்குதான் கூச்சத்தோடு இருந்தார்கள்.
வாடிக்கையாளர்களும் டாஸ்மாக் ஊழியர்கள் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு விட்டு விட்டார்கள். எல்லா உபரி செலவுகளும் போக இரண்டு ரூபாய் மேட்டரிலேயே டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தினமும் எக்கச்சக்கமாக கலெக்சன் ஆனது. இதுடாஸ்மாக் மண்டலங்களில் உள்ள அந்தந்த அலுவலகங்களின் ஊழியர்கள் கண்களை உறுத்தியது. அவர்கள் மேல் அதிகாரிகளுக்கு கடைகளின் கலெக்ஷன் விவரங்களை காதில் ஏற்ற, எங்களுக்கும் ஏதாவது செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையானது பின்னாளில் கலெக்ஷன் அதிகமாக அதிகமாக டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு கட்டளையாகவே மாறிப்போனது. அடுத்த கட்டமாக மதுவிலக்கு, , உள்ளூர் போலீசார், அந்த ஏரியா ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆகியோர் நாங்கள் மட்டும் என்ன வேடிக்கை பார்க்கவா இருக்கிறோம் என்று கேட்க, அது கடைசியில் போய் அமைச்சர் லெவலில் முடிந்து விட்டது.
அதன் பிறகு கடைக்கு இவ்வளவு கொடுத்தாக வேண்டும் என்று இலக்கே நிர்ணயிக்கப்பட்டது. கேள்வி கேட்க வேண்டியவர்கள் அத்தனை பேரும், பங்கு கேட்க போய், இனி யாரும் நம்மளை ஒன்றும் கேட்க முடியாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் அசைக்க முடியாத ஒரு இடத்தில் போய் உட்கார்ந்து விட்டனர்.
டாஸ்மாக் மதுபான விற்பனையின் ஓராண்டு வருமானம் 40 ஆயிரம் கோடி என்று வைத்துக் கொள்வோம், சராசரி 5% எக்ஸ்ட்ரா என்றால் கூட 2000 கோடி ரூபாய் தேறும்.. இத்தனை பேரும் கூட்டாக ருசி கண்டுவிட்ட பிறகு இதனை விட முடியுமா?
இது பற்றி நாமே இங்கே பலமுறை எழுதி இருக்கிறோம்.
விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பிறகு இன்றும் தமிழக முழுக்க அதே எக்ஸ்ட்ரா கலெக்ஷனை டாஸ்மாக் ஊழியர்கள் நிறுத்தவில்லை. ஆனால் ஆட்சி மாறியதும் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் ஒழிந்து விடும் என்று கனவு கண்டிருந்த மது பிரியர்கள்தான் கடும் அதிர்ச்சி ஆளாகி ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்களுடன் கட்டி புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே விஷயம், அரசின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை எல்லோருமே தெரியாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
[youtube-feed feed=1]