சென்னை: நாடு முழுவதும்மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி  எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே மே 15ந்தேதி  லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (மே 19ந்தேதி)  இரண்டாவது முறையாக பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 104 ரூபாயை கடந்து இருப்பது வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்க, மீண்டும் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனை நிரூபிக்கும் வகையில் நான்கு நாட்கள் இடைவெளியிலேயே மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை சுமார் 10 ரூபாய் வரையிலும் உயரும் எனவும், அது ஒரே அடியாக இல்லாமல் தினசரி அடிப்படையில் நிகழலாம் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான  எண்ணை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் விலை 86 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே  விலை வாசி உயர்வு  பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படுவதால், வாடகை வாகனங்களுக்கான கட்டணம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

[youtube-feed feed=1]