40 ஆண்டுகளாக நீடித்து வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கின் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த வழக்கில் நிலுவையில் இருந்த கடைசி மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2005-ல் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் அஜய் கே. அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்தது.

டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஹிந்துஜா சகோதரர்கள் மற்றும் ஸ்வீடன் நாட்டின் ஆயுத தயாரிப்பு நிறுவனமான ஏபி போஃபர்ஸ் மீதான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்திருந்தது.
மேலும், உயிரிழந்த குற்றம் சாட்டப்பட்டவர்களான ஸ்ரீசந்த் பி. ஹிந்துஜா மற்றும் கோபிசந்த் பி. ஹிந்துஜா ஆகியோரின் பெயர்களை வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்குவதற்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
“இவ்வளவு ஆண்டுகளாக இந்த வழக்கு ஏன் நிலுவையில் உள்ளது?” என நீதிபதி ஜே.பி. பர்திவாலா கேள்வி எழுப்பினார். வழக்கு 1986-ம் ஆண்டைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்ட நிலையில், இனியும் விசாரணையை தாமதப்படுத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
2005-லேயே குற்றச்சாட்டுகள் ரத்து
2005 மே 31-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம், ஹிந்துஜா சகோதரர்கள் மற்றும் ஏபி போஃபர்ஸ் நிறுவனத்துக்கு எதிரான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்தது.
மேலும், சிபிஐ நடத்திய விசாரணைக்காக அரசு செலவிட்ட சுமார் ரூ.250 கோடி குறித்து உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்திருந்தது.
1986-ம் ஆண்டு இந்தியா வாங்கிய பீரங்கி ஒப்பந்தத்தில் ஹிந்துஜா சகோதரர்கள் முறைகேடாக பணம் பெற்றனர் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை சிபிஐ தரப்பு தாக்கல் செய்யவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.
என்ன போஃபர்ஸ் விவகாரம்?
1986 மார்ச் 24-ம் தேதி, ஸ்வீடனின் ஏபி போஃபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 400 பீரங்கிகளை ரூ.1,437 கோடிக்கு வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக கமிஷன் வழங்கப்பட்டதாக 1987-ல் ஸ்வீடன் வானொலி செய்தி வெளியிட்டது.
இதையடுத்து இந்திய அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த போஃபர்ஸ் விவகாரம், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பால் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.