கடனை செலுத்தாதவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக, அவர்களின் செல்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை வங்கிகள் முடக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
தனிநபர் கடன், கார் கடன், வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களை வசூலிப்பதற்காக செல்போனின் செயல்பாடுகளை முடக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், அந்த செல்போன் அல்லது லேப்டாப் உள்ளிட்ட சாதனத்தை வாங்குவதற்கே வங்கி கடன் வழங்கியிருந்தால் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதுபோன்ற சூழலிலும், சாதனத்தை உடனடியாக முடக்காமல், படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என RBI கூறியுள்ளது.
மேலும், உள்வரும் அழைப்புகள், SMS மற்றும் அவசரகால SOS வசதி போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை எந்த சூழலிலும் முடக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கடன் வசூலிப்பதில் கடன் பெற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது, சமூக வலைதளங்கள் மூலம் அவமானப்படுத்துவது, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில், RBI இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
மேலும், செல்போன் முடக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வங்கிகளும், அவற்றுக்காக பணியாற்றும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களும், சம்பந்தப்பட்ட செல்போன் தயாரிப்பு நிறுவனம் அல்லது சர்வீஸ் ப்ரோவைடரிடம் இருந்து அந்த தொழில்நுட்பத்துக்கு உரிய சான்றிதழ் பெற வேண்டும் என RBI தெரிவித்துள்ளது.
கடன் வசூல் நிறுவனங்களை நியமிக்கும் போது வங்கிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் RBI வெளியிட்டுள்ளது. கடன் பெற்றவர் அல்லது உத்தரவாதம் அளித்தவரின் தனிப்பட்ட தகவல்களை, கடன் வசூல் பணிக்கு தேவையான அளவுக்கு மட்டுமே ஊழியர்கள் மற்றும் வசூல் நிறுவனங்களுடன் பகிர வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.