“தங்கம் வாங்கினா பீரோ லாக்கர்ல போடு… கல்யாணத்துக்கு எடுத்துப் போடு…” என்ற பழைய தலைமுறையின் ஃபார்முலாவை, “தங்கம் வாங்கினா டிஜிட்டலா முதலீடு பண்ணு… தேவைப்பட்டா பணமாக்கு!” என்று மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது இளம்தலைமுறை.
உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள ‘ஸ்வர்ணிம் உதான் 2047’ அறிக்கையின்படி, இந்திய வீடுகளில் சுமார் 31 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.315 லட்சம் கோடி. ஆனால், இந்தத் தங்கத்தின் பெரும்பகுதி லாக்கரிலும், பீரோவிலும், வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலும் “வேலை இல்லாமல்” கிடக்கிறது.

அறிக்கையின்படி, 1997 முதல் 2012 வரை பிறந்த ஜெனரேஷன் Z, தங்கத்தை வெறும் நகையாகவோ, குடும்ப பாரம்பரியமாகவோ மட்டும் பார்க்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் வாங்கவும், விற்கவும், முதலீடாக மாற்றவும் முடியும் என்ற நிதிச் சொத்தாகவே பார்க்கிறது.
அதனால், இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்புவது டிஜிட்டல் தங்கம், கோல்டு ETF, தங்க முதலீட்டு திட்டங்கள் போன்றவற்றைத்தான். கடைக்குப் போவதற்கு முன்பே ஆன்லைனில் ஒப்பிட்டு, விலையை ஆராய்ந்து, பிறகுதான் வாங்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
உலக தங்க கவுன்சிலின் கணிப்புப்படி, 2035-க்குள் இந்தியாவின் இளம்தலைமுறையினர் சுமார் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு நுகர்வுச் செலவை மேற்கொள்ள உள்ளனர். எனவே, எதிர்கால தங்க சந்தையை நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான்.
இதற்கிடையில், தங்க விலை தொடர்ந்து உயர்ந்தாலும், இந்தியர்களின் தங்க மோகம் மட்டும் குறையவில்லை. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாங்கிய தங்கத்தின் அளவு குறைந்திருந்தாலும், செலவிட்ட தொகை ரூ.1.98 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
விலை அதிகரித்ததால், பலர் குறைந்த எடையிலான நகைகள், குறைந்த காரட் நகைகள் மற்றும் கற்கள் பதித்த நகைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். பழைய நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்கும் முறையும் அதிகரித்துள்ளது.
மற்றொரு சுவாரஸ்யமான மாற்றமாக, தங்கத்தை விற்பதை விட, அதனை அடகு வைத்து கடன் வாங்குவதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால், வங்கிகளின் தங்கக் கடன் நிலுவை கடந்த ஓராண்டில் ரூ.5.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த, தேசிய தங்க வாரியம் மற்றும் தங்க புதுமை மையம் அமைக்க வேண்டும் என்றும் உலக தங்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
ஒரு தலைமுறை, “தங்கத்தைத் தொடாதே… அது குடும்ப கௌரவம்!” என்று லாக்கரில் பூட்டி வைத்தது.
அடுத்த தலைமுறை, “அதே தங்கம் வேலை செய்யட்டும்; இல்லையென்றால் நாம்தான் வேலை செய்து EMI கட்டிக்கொண்டே இருப்போம்!” என்று கணக்கு போடத் தொடங்கியுள்ளது.