டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பருக்குள் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை அமல்  செய்யப்பட உள்ளதாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இம்முறையின் கீழ், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்கத் தேவையின்றி, அதிநவீன ANPR கேமராக்கள் மற்றும் FASTag கருவிகள் வாயிலாக அடையாளம் காணப்பட்டு, அதனடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்  என்றும் முதல்கட்டமாக குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இநத நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது தளவாடங்கள் ஆற்றல் மாநாடு மற்றும் விருதுகள் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, நிகழ்ச்சியில் பேசும்போது,   தளவாடங்கள் செலவினத்தை குறைக்க சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஏதுவாக நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் டிசம்பா் மாதம் முதல் இடையூறற்ற சேவைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த திட்டத்தின்படி, சுங்கச்சாவடிகளில்  தானியங்கி வாகனப் பலகை அங்கீகாரம் (ஏஎன்பிஆா்), செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு மற்றும் ஃபாஸ்டேக் ஆகிய தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது..இந்த அமைப்பானது உயா் தரத்திலான ஏஎன்பிஆா் கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் குறியீடு மூலம் கட்டணத்தை வசூலிக்கும்.

இதன் காரணமாக, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய தேவை இருக்காது..புதிய அமைப்பின்கீழ் விதியை முறையாக பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு இணைய வழியில் நோட்டீஸ் அனுப்பப்படும். அபராதத்தைச் செலுத்த தவறுபவா்களின் ஃபாஸ்டேக் மற்றும் வாஹன் வலைதளத்தின் பிற சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றார்.

மேலும்,  கடந்த 12 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அதிவிரைவுச் சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்களால் இந்தியாவின் தளவாடங் கள் செலவினம் 16 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளதாக ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூா் மற்றும் ஐஐடி பெங்களூரு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12 சதவீதமாகவும் சீனாவில் 8 முதல் 10 சதவீதமாகவும் உள்ளது. நம் நாட்டுக்குத் தேவையான 87 சதவீத கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். இதற்காக ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. அதிக எரிபொருள் பயன்பாட்டால் மாசுபாடும் அதிகரிக்கிறது .இதற்கு மாற்றாக உயிரி-எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்..

வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்துவதே பிரதமா் நரேந்திர மோடியின் கனவு.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]