துறவறம் ஏற்று மடத்தின் தலைவராக (மடாதிபதி) வாழ்ந்த இந்து துறவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தால், அவரது தந்தை இழப்பீடு கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி கீதா கே.பி. வழங்கிய தீர்ப்பில், துறவறம் ஏற்றவுடன் அந்த நபர் தனது குடும்ப உறவுகளை சட்டரீதியாகவும் துறந்தவராகக் கருதப்படுகிறார். எனவே, அவர் சார்ந்திருந்த மடம்தான் அவரது சட்டப்பூர்வ வாரிசாகக் கருதப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு, 2009-ம் ஆண்டு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த கிராவாலா மடத்தின் மடாதிபதியான பிரயோகி குல்ஷன்னாத் குருபீர் ஹரிநாத்ஜி மகாராஜ் தொடர்புடையது.
அவர் உயிரிழந்த பிறகு, அவரது தந்தை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆனால், துறவறம் ஏற்று மடாதிபதியான பிறகு அவர் தனது குடும்ப உறவுகளைத் துண்டித்துவிட்டார். எனவே, அவரது தந்தை சட்டப்பூர்வ வாரிசு அல்ல என்று காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது.
இந்த வாதத்தை ஏற்ற தீர்ப்பாயம், குடும்ப சார்பு இழப்புக்கான இழப்பீட்டை வழங்க மறுத்தது. இருப்பினும், ‘சொத்து இழப்பு’ என்ற தலைப்பில் ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தந்தை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கூடுதல் இழப்பீடு கோரினார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துறவியான பிறகு அந்த நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான உறவு முழுமையாக முடிவுக்கு வருகிறது. அவர் செய்த சேவையின் பலனை அனுபவித்த மடம்தான் அவரது சட்டப்பூர்வ பிரதிநிதியாகக் கருதப்படும். அந்த மடத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் இழப்பீடு கோர உரிமை இருந்திருக்கும் என்று தெரிவித்தது.
இதையடுத்து, தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை மட்டும் தொடர அனுமதித்தது.