கொல்கத்தா: அசாம், மேற்குவங்க தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, அங்கு வரும் நாட்களில் பதவி ஏற்க உள்ளது.
அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி மே 9ந்தேதி பதவியேற்க உள்ளதாகவும், அசாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக, ஹிமந்த பிஸ்வா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் சட்டமன்றக் குழுக் கூட்டம், கொல்கத்தாவில் இன்று (மே 8) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் மாநில முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இவர் முன்னாள் முதல்வர் மம்தாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, சுவேந்து அதிகாரியின் பெயரை முன்மொழிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதனை முறைப்படி அறிவிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி, சாமிக் பட்டாச்சார்யா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சல் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். புதிய அரசு பதவியேற்கும் விழா சனிக்கிழமை (மே 9) நடைபெறும் என்று சாமிக் பட்டாச்சார்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான ‘ரவீந்திர ஜெயந்தி’ அன்று இப்பதவியேற்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் முதல் முறையாக அமையவுள்ள பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையில், அசாமில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாஜக, பதவி ஏற்பு விழா வரும் 12ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில், மொத்தம் உள்ள 126-ல் 102 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக இக்கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இதனிடையே, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்துக்கான மத்தியப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் பாஜகவின் மத்தியப் பார்வையாளர்கள் குவாஹாட்டிக்கு வருவார்கள் என்றும், அதன் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஹிமந்த பிஸ்வா சர்மாவே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பதவியேற்பு விழா மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக பதவியில் தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.