“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவியிடம் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது” என்று கூறி, தாயிடமிருந்த குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்து புனே குடும்ப நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த வழக்கில், மனைவி கணவரை உடல், மன ரீதியாக கவனிக்கவில்லை, குடும்ப மரியாதையை காக்கவில்லை, கணவரின் நலனுக்காக வேண்டிக்கொள்ளவில்லை என்று நீதிபதி கணேஷ் குலே கருத்து தெரிவித்தார். மேலும், குழந்தையிடம் தந்தையைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களை விதைத்ததாகவும், நீதிமன்ற உத்தரவுகளை முறையாக மதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மனைவி குழந்தையை தந்தைக்கு எதிரான “ஆயுதமாக” பயன்படுத்துவதாகவும், இதனால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். அதேவேளை, சிங்கப்பூர் நீதிமன்றம் ஏற்கனவே குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தந்தை பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதும், குழந்தைக்கு நல்ல கல்வி மற்றும் வசதிகளை வழங்கும் நிலையில் இருப்பதும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு தாயின் பெற்றோர் உரிமையை மதிப்பிடும்போது “கணவருக்கான புனித கடமைகள்”, “குடும்பத்தின் மருமகள்” போன்ற பாரம்பரிய கருத்துகளை நீதிமன்றம் பயன்படுத்தியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் நலன்தான் முதன்மை என்ற சட்டக் கோட்பாட்டை விட, பாலினப் பாத்திரங்கள் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துகளே தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

[youtube-feed feed=1]