சென்னை: அரசு பணியில் உள்ள பெண்களின் 3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை ஏற்க முடியாது என்று கூறிய உயர்நீதிமன்றம், ஒவ்வொரு பிரசவத்தின்போது பெண்கள் பிரசவத்தின்போது படும் வேதனை ஒன்றே என்பதால், அவர்களின் மகப்பேறு விடுமுறையிலும் பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பணியாற்றும் சாயி நிஷா தனது 3-வது மகப்பேறுக்காக, 2027 பிப்ரவரி வரை ஓராண்டு விடுப்பு கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 3-வது மகப்பேறுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் அரசாணையை சுட்டிக்காட்டி, கூடுதல் விடுப்பு வழங்க மறுத்ததுடன் சாய் நிஷாவை ஏப்ரல் மாதத்துக்குள் பணியில் சேர உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சாய் நிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, சாயி நிஷாவுக்கு முழுமையாக ஓராண்டு விடுப்பு வழங்க ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியது.
மேலும், முதல் மற்றும் 2-வது பிரசவம் போலவே, 3-வது பிரசவத்திலும் பெண்கள் அதே வேதனையை அனுபவிப்பதால் பாரபட்சம் காட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]