சென்னை: தமிழ்நாட்டில் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று மாலை 6மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளது.

இந்த கருத்து கணிப்புகளில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள், திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா? என்பது குறித்த மக்களின் மனநிலை வெளியாகும்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு  84.51% வாக்குப்பதிவு   நடைபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளது.

இந்த அதிகப்படியாக வாக்குப்பதிவு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆய்வாளர்கள் ஒருபுறம் கூறி வந்தாலும், மற்றொருபுறம் பெண்களின் அமோக ஆதரவு பெற்ற திமுகவே மீண்டும் ஆட்சியை தக்க வைத்துககொள்ளும் என நம்பப்படுகிறது. இருந்தாலும், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் ஆதரவு தவெகவுக்கு இருப்பதால், விஜய் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படலாம் என்றும், அல்லது தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும்  மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும்.

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கு (SIR)  பிறகு 5.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்த நிலையில், அவர்களில் 4 கோடியே 87 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த அதிகப்படியான வாக்குப்பதிவானது தேர்தல் முடிவுகளின் கடைசி நேரத்தில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ், கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த 30 நிமிடங்களுக்குப் பிறகே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட முடியும். அதன்படி, இன்று மேற்குவங்க மாநிலத்தில் இரண்டாம் வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின் முடிவானது, மாலை  6.30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி தொடர்பான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளும் இன்று வெளியாக உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு எடுக்கப்படுவது எப்படி?

அதாவது, வாக்குப்பதிவு அன்று, வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் பொதுமக்களிடம்,  உடனடியாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஆகும். வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்களின் மனநிலையை அளவிடும் கேள்விகளாக இல்லாமல், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்த வாக்காளர்களின் உண்மையான பதில்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

இந்த பணிகளில் பிரபல ஊடகங்கள் மட்டுமின்றி,  பிரபல டியூபர்களும்  மக்களின் மனநிலை மற்றும் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பது குறித்து கருத்து கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முடிவுகள் இன்று இரவு வெளியாகிறது. இதை காண பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

[youtube-feed feed=1]