சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, தேர்தல் ஆணையம் நேரலையில் கண்காணித்து வருகிறது. இதற்காக சுமார் ஒன்றரை லட்சம் காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இந்தத் தேர்தலில்  வாக்களிக்க ஒட்டுமொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள்  தயாராக உள்ளனர். இவர்களில்,  பெண்களின் எண்ணிக்கை 2,89,60,838 ஆகவும், ஆண்களின் எண்ணிக்கை 2,77,38,925 ஆகவும் உள்ளது. மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 14.5 லட்சம் இளைஞர்கள் முதல்முறை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தலையொட்டி,  மாநிலம் முழுவதும் 33,133 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, 1.06 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75,000-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும்ப யன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களும், 83,000-க்கும் அதிகமான காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியும் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுவதை,   1.50 லட்சம் கேமராக்கள் மூலம்  நேரலையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. . இதனை சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திலிருந்து 18 அதிகாரிகள் கொண்ட குழு நேரலையில் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]