சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாக்கினை செலுத்தினர்.
தமிழகத்தில் இன்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 2,89,60,838 ஆகவும், ஆண்களின் எண்ணிக்கை 2,77,38,925 ஆகவும் உள்ளது. மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 14.5 லட்சம் இளைஞர்கள் முதல்முறை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் 33,133 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களும், 83,000-க்கும் அதிகமான காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக, 1.06 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏதேனும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 4,18,541 வாக்குகள் பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
நடப்பு தேர்தலில் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தலா 75,000-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இதனை சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திலிருந்து 18 அதிகாரிகள் கொண்ட குழு நேரலையில் கண்காணிக்கும்.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதையொட்டி காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் குடும்பத்துடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை செலுத்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது, வெற்றி உறுதி. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தேவையற்ற கேள்விகள் வேண்டாம் என அவர் கூறினார்.
சென்னை சாலிகிராமம் ஜவஹர் குளோபல் பள்ளியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்.
நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாக்களித்தார்.
நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
நடிகை குஷ்பூ, சுந்தர்.சி தங்களது மகளுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகள் அஜீத் வாக்களித்தார்.
காரைக்குடியில் ப. சிதம்பரம் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சென்னை தேனாம்பேட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மகள் சௌந்தரியாவுடன் வாக்களித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் காலை காமராஜர் சாலை நகராட்சி பள்ளி (எல்டம்ஸ் ரோடு), ஆழ்வார்பேட்டையில் வாக்கினை செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் செங்கோட்டையன் வாக்களித்தார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தனது மகன் மற்றும் மனைவியுடன் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
[youtube-feed feed=1]