சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23ந்தேதி( வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த முறை சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி (நாளை) 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதன்பிறகு, தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத வெளிநபர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.1,213 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த (2026 சட்டமன்ற) தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், ஒரு திருநங்கை என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23-ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,69,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில், 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அதாவது மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன.
ஓட்டுச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 75 ஆயிரம் விவிபாட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தேர்தல் பணியில் 83,875 போலீஸார், 40,427 அரசு ஊழியர்கள் மற்றும் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8ஆயிரம் கூப்பன் உள்பட உள்பட மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜயின் தவெகவும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அதிரடி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது..
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களமிறங்குவதுடன் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிய வரும்.
[youtube-feed feed=1]