சென்னை: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பரபரப்பான சூழலில், தந்தி டிவி, சாணக்யா தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தவெகவின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல் தேதிகளை மார்ச் 15ந்தேதி வெளியிட்டது.
தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படு கின்றன. அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 5.67 கோடி பேர். அதில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.89 கோடி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.77 கோடி. மூன்று பாலினத்தவர் 7,617 பேர் உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கும் 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் இருக்கின்றனர். வழக்கமாக பதிவாகும் வாக்குகளைவிட, எஸ்.ஐ.ஆர் திருத்தத்திற்குப் பிறகு கூடுதலாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை உள்பட மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், அக்கட்சியும் தனித்து களமிறங்குகிறது. நிறைவேற்ற முடியாத பல அறிவிப்புகளை வெளியிட்டு, திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்துள்ளது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்து களமிறங்குவதுடன், இலவச அறிவிப்களை கடுமையாக எதிர்ப்பதுடன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதனால் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த பரபரப்பான கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. தந்தி டிவி மற்றும் சாணக்காய தினமலர் இணைந்து நடத்திய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதுவரை வெளியான அனைத்து கருத்து கணிப்புகளும், திமுக அமோக வெற்றிபெறும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்புகள், தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு:
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் தேர்தல் கள நிலவரம் என்ன? என்பது பற்றி தந்தி டிவி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர்களின் மனநிலை குறித்த கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்புகளை மார்ச் 29 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றதாகவும் தந்தி டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக தொகுதி வாரியாக இந்த கருத்து கணிப்புகள் தற்போது, முழுமையான கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில்
திமுக கூட்டணி 98 தொகுதிகளில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், அதிமுக கூட்டணி 91 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எப்போதும்போல இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு ஜீரோவும், தவெக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனால், பல தொகுதிகளில் வாக்கு வங்கிகளை பிரித்து, வெற்றி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுதவிர 43 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த 43 தொகுதிகள் தான் தமிழகத்தின் ஆட்சியை நிர்ணயம் செய்ய உள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை எடுத்து கொண்டால் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் தந்தி டிவி கருத்து கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதன் காரணமாக தொங்கு சட்டமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் – சாணக்யா கருத்து கணிப்பு:
பிரபல நாளிதழான தினமலர் – சாணக்யா இணையதளம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே வெளியிட்டுள்ளார். அதன்படி, 4 சதவீத வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்வியுடன் நடத்திய சர்வேயில், அ.தி.மு.க.வுக்கு 36 சதவீதமும், தி.மு.க.வுக்கு 32 சதவீதமும், த.வெ.க.வுக்கு 23 சதவீதமும், 7 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 2 சதவீதமும் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக தி.மு.க. கூட்டணி 103 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 102 தொகுதிகளிலும், 29 தொகுதிகளில் கடும் போட்டியும், இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த 29 தொகுதிகளின் வெற்றி நிலவரம்தான் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தீர்மாணிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
2021-ல் தி.மு.க கூட்டணி பெற்ற, தொகுதிகளை விட இந்த தேர்தலில் குறைவான தொகுதிகள் பெறும். அதேபோல் 2021 தேர்தலை விட அதிகமான தொகுதிகள் அ.தி.மு.க. கூட்டணி பெறும் என்று பாண்டே கணித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் சாணக்யா வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்திருந்தன.
இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். 45% வாக்குகள் உடன் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல போல் ட்ராக்கர் (Poll Tracker) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல, இந்தியா டுடே உள்பட பல்வேறு கருத்து கணிப்புகளும் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என கூறியிருந்த நிலையில், கடந்த வாரம் வெளியான விகடன் கருத்து கணிப்பிலும் திமுக கூட்டணி 121 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும்ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தது.
இந்த நிலையில், தற்போதைய களநிலவரம் காரணமாக, அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என குறிப்பிட்டுள்ளது.
[youtube-feed feed=1]