சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார் 18,971 போலீசார் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது.முதல் கட்டமாக தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதியோர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தபால் வாக்கினை செலுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றுமுதல் இரண்டு நாள், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் இதர பணிகளில் உள்ள போலீஸார் தபால் வாக்குகளைப் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 18,971 போலீஸார் தங்களது வாக்குகளை இன்று பதிவுசெய்ய உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காவலர்களுக்கு தனித்தனியாக சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு நேரில் சென்று தங்களின் அடையாளச் சான்றுகளைக் காட்டி தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
இந்த வாக்குப் பதிவு நடைமுறைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற உள்ளன. மேலும் வாக்குப் பதிவுகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவு செய்யப்பட உள்ளது.
“போலீஸாரின் தபால் வாக்குகள் 100 சதவீதம் நடைபெற வேண்டும். எனவே அனைத்து காவலர்களும் தவறாது வாக்களிக்க வேண்டும்” என சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் அறிவுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]