நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் தமிழகமே அதிக பாதிப்பைச் சந்திக்கும் என ஆய்வு தகவல்கள் தெரிவிப்பதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மசோதா மற்றும் அரசியலமைப்பு திருத்தங்களை ஆய்வு செய்ததில், மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும்.

அது மட்டுமல்லாமல், இட இழப்பு மற்றும் சதவீத பங்கு குறைவு ஆகிய இரு அம்சங்களிலும் தமிழகமே அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு எந்த முறையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை தெளிவாக விளக்கவில்லை. இருப்பினும், மசோதா விவரங்களைப் பார்த்தால், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாகிறது.

தற்போது மக்களவையில் தமிழகத்திற்கு 39 இடங்கள் உள்ளன. மொத்தம் 524 இடங்களில் (யூனியன் பிரதேசப் பகுதிகளுக்கான 19 இடங்களைத் தவிர்த்து) இது 7.4 சதவீதமாக உள்ளது.

புதிய திட்டத்தின் படி, மாநிலங்களுக்கு மக்களவை இடங்கள் 815 ஆக அதிகரிக்கப்படுகின்றன (யூனியன் பிரதேசப் பகுதிகளுக்கு 35 இடங்கள் தனியாக வழங்கப்படும்).

2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழகத்தின் இடங்கள் 39 இலிருந்து 50 ஆக உயரும்.

ஆனால், மொத்த இடங்களில் தமிழகத்தின் பங்கு 6.13 சதவீதமாகக் குறையும். இது 1.31 சதவீத புள்ளிகள் குறைவாகும். இந்த குறைவு, அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்திற்கே அதிகமாக இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போதைய பங்கு தொடர்ந்திருந்தால், தமிழகத்திற்கு 61 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 50 இடங்களே கிடைக்க இருப்பதால், உண்மையில் 11 இடங்களை இழக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: மக்களவை இடங்களின் பங்கினை கணக்கிடும் போது, யூனியன் பிரதேசப் பகுதிகளுக்கான இடங்கள் சேர்க்கப்படவில்லை. அரசியலமைப்பின் 81வது பிரிவின்படி, மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கீடு மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

[youtube-feed feed=1]