மக்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
“இது பெண்களுக்கான மசோதா அல்ல; இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றுவதற்கான முயற்சி” என்று அவர் குற்றம் சாட்டினார்.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், பெண்கள் இடஒதுக்கீட்டை காரணமாக காட்டி அரசியல் லாபம் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் அரசியல் குரலை பலவீனப்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

“இந்த மசோதா பெண்களை முன்னேற்றுவதற்காக அல்ல; அவர்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் அமைப்பை மாற்றும் முயற்சி” என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களின் பங்கை பாராட்டிய ராகுல் காந்தி, “நாட்டின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் பெண்கள் முக்கிய சக்தியாக உள்ளனர். நம்மில் ஒவ்வொருவரும் பெண்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுள்ளோம்” என்றார்.
மேலும், “நாட்டில் அரசியல் பலம் குறைந்து வருகிறது என்ற பயத்தால், தற்போதைய அரசியல் வரைபடத்தை மாற்ற முயற்சி நடக்கிறது. அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
சாதி கணக்கெடுப்பு குறித்து பேசும்போது, “அது பிரதிநிதித்துவத்தில் பயன்படுத்தப்படுமா என்பது முக்கியம். ஆனால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு சம்பந்தமே இல்லை என்று சொல்லப்படுகிறது” என்று அவர் விமர்சித்தார்.
“தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சிதான் இது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இருப்பினும், பெண்களின் பங்கை அவர் பாராட்டியபோது, “நாட்டின் அடையாளத்திலும் முன்னேற்றத்திலும் பெண்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர். தாய், சகோதரி போன்ற உறவுகள் மூலம் அனைவரின் வாழ்க்கையையும் அவர்கள் பாதித்துள்ளனர்” என்றார்.
விவாதத்தின் போது சிறிது நகைச்சுவையையும் கலந்து பேசிய அவர், “பிரதமரும் நானும் மனைவி என்ற விஷயம் இல்லை; ஆனால் தாயும் சகோதரியும் உள்ளனர்” என்று கூறியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.
[youtube-feed feed=1]