சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில், திராவிட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை மிஞ்சும் வகையில், பெண்களுக்கு மாதம் ரூ.2500, வருடத்துக்கு 6 சிலிண்டர் இலவசம், திருமணமாகாத பெண்களுக்கு  ஒரு சவரன் தங்கம்  உள்பட பல்வேறு அதிரடி இலவச அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கி மக்களை அடிமையாக்கி வருகின்றன. இரு திராவிட கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், இலவசங்களை அறிவித்து, தமிழர்களை முட்டாளாக்கி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது, அரசியலில் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக கூறிக்கொண்டு திரியும், நடிகர் விஜயும், ஏராளமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, தானும் ஒரு அரசியல் சாக்கடைதான் என்பதை நிரூபித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் தகித்து வருகிறது. தற்போது 5 முனை போட்டி நிலவுவதால் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மயக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

 இந்த நிலையில், தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் விஜய்  ஏப்ரல் 16ந்தேதி அன்று மாலை  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. விழாவில் கட்சித் தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, திருநங்கை ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை பிரதிகளை வழங்கினார்.

இந்த அறிக்கையின் முதல் பிரதியை ஒரு விவசாயி பெற்றுக்கொண்டது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருந்தது. அந்த விவசாயி விஜய்க்கு நெல் மணிகளை பரிசாக வழங்க, அதை ஏற்றுக்கொண்ட விஜய் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், இந்த தேர்தல் அறிக்கை திருக்குறள் கூறும் “அறம், பொருள், இன்பம்” என்ற மூன்று அடிப்படைகளில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். அறம் என்பது நேர்மை மற்றும் நல்லாட்சியை குறிக்கும் என்றும், பொருள் என்பது மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்றும், இன்பம் என்பது மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

“திமுகவும் மற்றும் பலரும் ஒன்னுதான் என்று நாம் கூறினோம். அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் பாருங்கள். ஒருவர் 10 ஆயிரம் கொடுத்தால், மற்றொருவர் ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் தருகிறார்கள். இருவரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 கொடுக்கிறார்கள். இவர்கள், ஒரு குடையில் கீழ் இருக்கும் கொள்கைக் கூட்டம்தான். இந்த ஊழல் கூட்டம்போல ஏமாற்ற மாட்டோம். அள்ளிவிட மாட்டோம். நமக்கு மக்கள்தான் முக்கியம். ஆட்சிக்கு வந்தபிறகு சொல்லாததையும் செய்வோம்.” என்றார்.

இப்படி பேசி முடித்த கையோடு, திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களையெல்லாம் எடுத்து, பட்டி டிங்கரிங் பார்த்து தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதை பார்க்க முடிகிறது. திமுக, அதிமுக சொன்னவற்றில் சிலவற்றை கூடுதலாக (தொகை, எண்ணிக்கை) சேர்த்து வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு முக்கிய வாக்குறுதிகள்

“வெற்றி மகளிர் திட்டம்” என்ற பெயரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:

60 வயதுக்குள் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 2,500

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள்

ஏழை குடும்ப மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டு சேலை

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ. 15,000 உதவி

கல்வி மற்றும் சுகாதார திட்டங்கள்

கல்வி துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது:

அனைத்து மாவட்டங்களிலும் அரசு உறைவிடப் பள்ளிகள்

AI மூலம் இலவச போட்டித் தேர்வு பயிற்சி

பள்ளி, கல்லூரிகளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதில் புற்றுநோய், இதய சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் அடங்கும்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள்

இளைஞர்களை குறிவைத்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000

12ம் வகுப்பு / டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500

தொழில் தொடங்க விரும்புவோருக்கு ரூ. 25 லட்சம் வரை பிணையில்லா கடன்

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்

5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி

5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி

நெல் குவிண்டால் ரூ. 3,500, கரும்பு டன் ரூ. 4,500

குத்தகை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டு ரூ. 10,000 உதவி

100% பயிர் காப்பீடு

சிறு, குறு தொழில்களுக்கு ஆதரவு

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஊக்கமாக:

ரூ. 15,000 கோடி நிதி உருவாக்கம்

மின்சார வரி 5 ஆண்டுகள் முழுமையாக விலக்கு

மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்

மேலும், அரசு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்த தேர்தல் அறிக்கை மூலம் விஜய் தலைமையிலான தவெக கட்சி, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையை ஒருங்கிணைத்து வாக்காளர்களை கவர முயற்சி செய்கிறது. 2026 தேர்தலில் இந்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

[youtube-feed feed=1]