சென்னை: நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வரும் “மகளிர் இடஒதுகீட்டுக்கு நிபந்தனையின்றி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்ப தாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அதே வேளையில் தொகுதி வரையறையை எதிர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16  (இன்று) முதல் 18,  வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும்,   பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும்  தேர்தல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த அரசியலமைப்பு சட்ட திருத்தம், உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக் களை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில்,  மத்தியஅரசு கொண்டு வரும்,  மகளிர் இடஒதுகீட்டுக்கு ஆதரவு  தெரிவிப்பதாகவும்,  தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்றும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள விடியோவில், ‘பாஜக அரசு தற்போது முன்மொழிந்திருப்பதுக்கும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. இந்தத் திருத்தம் என்பது, தொகுதி மறுவரையறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி.

மகளிர் இடஒதுக்கீடு நமது அரசமைப்பின் ஒரு பகுதி. அரசு முன்மொழிந்த இடஒதுக்கீட்டுக்கும் அதற்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்து பிற்படுத்தப்பட்டோர் (ஓபிஎசி), பட்டியலினத்தோர் (எஸ்சி), பழங்குடியினத்தைச் சேர்ந்தோர் (எஸ்டி) உரிமையைத் திருடுவதை அனுமதிக்க மாட்டோம்” என ராகுல் குறிப்பிட்டார்.

‘தொகுதி எல்லைத் திருத்தம், தொகுதி மறுவரையறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி’ என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அதனால், அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலின்போது இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில்  நேற்று  (ஏப். 15) இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]