சென்னை: சென்னையில் விஜய் பிரசாரத்தின்போது, அவர் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, காவல்துறையினர் விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது வில்லிவாக்கம் பயணமும் தடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், விஜய் காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். பெரம்பூரை தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்பினார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், நேற்று காலை (மார்ச் 30) அங்கு வேட்புமனுவைதாக்கல் செய்து விட்டு தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார். அவரது பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காக கூட்டம் கூடியதால், பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி, வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். பெரவள்ளூர் – செம்பியம் காவல் நிலைய எல்லைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது, இரு இடங்களில் அனுமதி பெற வேண்டிய நிலையில் பெரவள்ளூரில் மட்டும் அனுமதி பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, செம்பியம் காவல்துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி குமார் அளித்த புகாரில் விஜய் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அளித்த புகாரில் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “கொளத்தூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்டு காவல்துறை செயல்பட்டு வருகிறது. விஜய் பரப்புரையின் போது திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பூரில் பாதுகாப்பு கொடுத்த காவல்துறையினர், கொளத்தூரில் பாதுகாப்பு தரவில்லை. கொளத்தூரில் அதிகமான மக்கள் திரண்ட நிலையில், காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை.
நாங்கள் சொன்ன பிறகும் பெண்கள், குழந்தைகள் வருகின்றனர். காவல் துறையினர் இப்போதும் முதல்வர் பேச்சை கேட்டு செயல்படு கின்றனர். எங்களின் பரப்புரையை முடக்குவதே திமுகவின் திட்டம் – தவெக ஆதவ் அர்ஜுனா. கொளத்தூரில் முதல்வருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. விஜய் பரப்புரை மேற்கொண்டால் அவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் அஞ்சுகிறார்கள். உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை அதிகாரிகளை பணிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நாளை சந்தித்து முறையிடவுள்ளோம்” என்றார்.
பெரம்பூர் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பேசிய விஜய், ’’என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே.. லட்சுமி நரசிம்மர் கோயிலில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். ஆனால் நம் வீட்டின் வாசலில் இருந்து தொடங்கலாம் என்று ஆசைப்பட்டேன். வட சென்னையின் அடையாளம் பெரம்பூர்.
பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகம் உள்ள தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். பெண்கள் நிம்மதியாக கழிப்பறை போகவோ, ஒருவர் பயமில்லாமல் டீக்கடை செல்லவோ கூட முடியவில்லை. இது நாடா இல்லை காடா? இங்கு அரசாங்கம் என்ற ஒன்று நடக்கிறதா? இந்த நிலைக்குக் கொண்டு தமிழ்நாட்டைக் கொண்டு வந்தது தீயசக்தி திமுகதான் என்று எல்லோருக்கும் தெரியும்.
5 ஆண்டுகள் காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், என்ன செய்து கொண்டிருக்கிறார்? எதற்கு இந்த ஆட்சி? எதற்கு இந்த அதிகாரம்?
இந்த 5 ஆண்டில் திமுக அரசினர் எப்படி நம்மை ஸ்மார்ட் ஆக கொள்ளை அடித்தார்களோ, அதேபோல ஸ்மார்ட் ஆக ஓட்டு போடுங்கள். எப்படியாவது வெல்லலாம் என்று நினைக்கும் திமுக ஆட்சியை தூக்கி எறியுங்கள். கொடுக்கும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அவர்களின் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்’’.
இவ்வாறு பேசினார்.
[youtube-feed feed=1]