சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 29) சென்னையின் நட்சத்திர ஓட்டலில்,   ஒரே மேடையில் தமிழ்நாட்டின் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர்களையும்  அறிமுகம் செய்து வைக்கிறார்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கையானது மார்ச் 4ம் தேதி அன்று முடிவுகள் வெளியாகிறது. இதையடுத்து தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் பிரதான  அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகிறது. நடப்பாண்டு 5 முனை போட்டி நிலவி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல வாரங்களுக்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தனது பரப்புரையை தொடங்கிவிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து வேட்பாளர் கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில், இதுவரை  150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், திமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளது.

இந்த நிலையில், அரசியல் களத்தில் புதிய வரவான விஜயின் தவெக கடந்த சில நாள்களாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தி இறுதி பட்டியலை முடிவு செய்து, வேட்பாளர்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,  மார்ச் 29ம் தேதி   அன்று நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். இதை தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இ‌ந்‌‌த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வகையில் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]