சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு ஏற்கனவே இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் நெல்லையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் சமீப காலமாக பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கி, தனது கவுரவத்தை இழந்து வருகிறது. ஏற்கனவே வெளியே உள்ள ரவுடி ஒருவன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அதை காட்டி மிரட்டி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் போனில் ஒருவருடன் சார் சார் என்று பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து, யார் அந்த சார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
விசாரணையில், அந்த நபர் திமுகவைச் சேர்ந்த ஞானவேல் ராஜா என்பது தெரிய வந்தது. அவர் தற்போது தண்டனை பெற்று சிறையில் உள்ளார். இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அண்ணா பல்கலையில் அரங்கேறி உள்ளது. இந்த சார் யார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்த நிலையில்,. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாருக்குள்ளான பேராசிரியர் நெல்லையில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு பயின்று வரும் மாணவி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், வகுப்பு எடுக்கும் பேராசிரியர் ஒருவர் தனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி பேசி வருவதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த மூன்று வருடங்களாக நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருகிறார். தனக்கு மட்டுமின்றி தனது தோழிகள் சிலருக்கும் பாலியல் ரீதியான குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். பல மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கமிட்டியிலும் புகார் அளித்துள்ளேன். எனவே உடனடியாக பேராசிரியர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் மாணவியிடம் இருந்து செல்போனை பெற்ற போலீசார், புகாருக்குள்ளான பேராசிரியர் மாணவிக்கு அனுப்பி உள்ள குறுந்தகவல்கள் முழுவதும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில் புகாரில் உண்மை தன்மை தெரிய வந்தவுடன் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், புகாருக்குள்ளான பேராசிரியர் ஞானவேல் பாபு மீது பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஞானவேல் பாபுவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஞானவேல் பாபுவை திருநெல்வேலி மாவட்டத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவி அளித்த ஆடியோ ஆதாரங்கள், வாட்சப் மெசேஜ்களை அடிப்படையாக வைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரை சென்னை அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]