சென்னை: சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்ய 291 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர தேர்தல் ஆணையரான ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அதாவது,  அரசியல் கட்சிகள் தெருமுனை, பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட 291 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்தின்  சுவீதா செயலி மூலம் அதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுளளது.

இதுதொடர்பாக,  சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் தெருமுனைக் கூட்ட பிரசாரம் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு சுவீதா என்ற செயலி மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். இத்தகைய விண்ணப்பங்கள் நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும்.Long Distance Bus & Rail

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையரால் ஏற்ற இடங்களாக தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு 112 இடங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு 179 இடங்கள் என 291 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அந்த இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெறப்படும் இத்தகைய விண்ணப்பங்கள் காவல்துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுக்கு கருத்து மற்றும் தடையில்லாச் சான்றுக்காக அனுப்பப்படும்.

இந்த துறைகளின் கருத்துகள் மற்றும் தடையின்மைச் சான்றுகளின் அடிப்படையில், தேர்தல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட துறைகளிடம் இருந்து தடையின்மைச் சான்று கிடைக்காத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதற்கான காரணங்களும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்படும். இந்த சுவீதா செயலி மூலம் இதுவரை 816 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில் 408 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 134 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 274 விண்ணப் பங்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே, தேர்தல் விதிகளின்படி சுவீதா செயலி மூலம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை அளித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]