சென்னை: தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  டிஜிபி அலுவலகத்துக்கு  நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

“தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய (பொன்ராஜ்) ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜய் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று மாலை  நேரில் வருகை தந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அரசியல் விமர்சகர் பொன்ராஜ் என்பவர் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் தமிழகப் பெண்களை மிகவும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்திருப்பதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொன்ராஜ் ஆளும் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருவதால், தமக்கு யாரும் கடிவாளம் போட முடியாது என்ற மமதையில் அவர் எல்லையை மீறிப் பேசி வருவதாகவும், தமிழ்ப் பண்பாட்டில் போற்றப்படும் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பொன்ராஜின் இந்தப் பேச்சுக்கு தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கட்சியின் தலைவரே நேரடியாகக் களமிறங்கிப் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழக மகளிரின் மரியாதையைக் காக்க வேண்டும் என்பதே இந்தப் புகாரின் முக்கிய நோக்கம் என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]