சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன்  கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன்  மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் தொடங்கி உள்ளது.

பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாத பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணையும் நன்னாளில் கொண்டாடப்படும் மிக முக்கிய இந்து சமய பண்டிகையாகும். இது பார்வதி-பரமேஸ்வரன், முருகன்-தெய்வானை, ராமன்-சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும், முருகப் பெருமான் சூரனை வென்ற நாளாகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதால் திருமணத் தடைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.
நடப்பாண்டின்  பங்குனி உத்திரம்,   ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,   அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் கொடியேற்றம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. அதன்படி,  பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திரம் கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூரயாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் காலை 9.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
.பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 1 ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 5நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]