மதுரை: கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கோயில் சொத்துகளைஆக்கிரமிக்கும் நபர்களுக்கு ஆதரவாக பத்திரப்பதிவு செய்யும் வகையில் கடந்த 2025ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த அரசாணையாது, கோவில் சொத்துக்களை முறைகேடாக பதிவு செய்வதற்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழகத்தில் கோயில் நிலங்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவுத் துறையில் கோயில் நிலங்களின் மதிப்பீட்டை ‘பூஜ்ஜியம் மதிப்பு’ எனபதிவு செய்யப்படுவது வழக்கம். இதனால் கோயில் நிலங்களை வேறு யாரும் பத்திரம் பதிவு செய்யவோ, பட்டா பெறவோ முடியாது. கோயில் நிலங்களை யாராவது பத்திரப்பதிவு செய்ய முயன்றால் பதிவுத்துறையில் புகார் அளித்து பதிவு ரத்து அல்லது பதிவு நிறுத்தம் செய்து வைக்கப்படும்.
ஆனால், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை 2025-ம் ஆண்டு ஆக.29-ந்தேதி, கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யவும், பட்டா பெறவும் வழிவகை செய்யும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணை அடிப்படையில் கோயில் சொத்துகள் தொடர்பாக முறையீடு செய்ய வேண்டும் என்றால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிடம்தான் முறையிட முடியும். இந்த அரசாணை கோயில் சொத்துகள் தனிநபர்களுக்கு எளிதாகப் பெயர் மாற்றம் செய்ய வழிவகுக்கிறது. இது சட்டவிரோதம். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்பாடுகளில் கோயில் நிலங்கள் உள்ளன. புதிய அரசாணையால் கோயில் சொத்துகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அரசாணையை ரத்து செய்தும், அதுவரை அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு மீண்டும், மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் மார்ச் 25ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கிறஞர், கோவில் சொத்துக்கள் பத்திரபதிவு செய்வது தொடர்பான அந்த அரசாணை திரும்ப பெறப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
[youtube-feed feed=1]