சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 26) கடைசி நாள்.
இதன்பிறகு விண்ணப்பிப்பவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது. தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து தங்கள் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாகச் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ள தகுதியுள்ள குடிமக்கள், அதனைச் சரிபார்த்துப் பெயரை இணைப்பதற்கான இறுதிக்கட்ட காலக்கெடுவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்க மார்ச் 26-ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், ‘படிவம்-6’ (Form 6) மூலம் அந்தந்தப் பகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளச் சேவை மூலமாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதால், இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள நபர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் ஜனநாயகக் கடமையை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]