சென்னை: இலவச ஃபிரிட்ஜ், மகளிர் சிறப்பு தொகை ரூ.10ஆயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2000, ஆண்டக்கு 3 சிலிண்டர் இலவசம் உள்பட ஏராளமான அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிகையில் இடம்பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டை மாற்றப்போகும் 22 அதிரடி உட்கட்டமைப்பு வாக்குறுதிகள் உள்பட 297 அறிவிப்புகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்– பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக வெளியிட்டு உள்ளேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்jது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும்.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி, அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,69,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில், 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.. நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. ஓட்டுச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் 15ந்தேதி மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், த வெக மற்றும் சசிகலா ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபறக்கிறது.

அதிமுக தேர்தல் அறிக்கை
இந்த பரபரப்பான சூழலில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு வாக்குறுதியும் தீர ஆராய்ந்து, அவற்றிற்க்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்த பிறகே, செயல்படுத்தப்படும் என்ற உறுதியோடு அறிவித்துள்ளோம். நிச்சயமாக அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்! மக்கள் நலமுடன் வாழ, மகளிர் வாழ்வு உயர, தமிழகம் செழித்து வளர, உங்களின் நல்லாட்சி மலர, வாக்களிப்பீர் – இரட்டை இலை! என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் – விவரம்
:சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டன. அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகை ரூ.10,000, மகளிருக்கு மாத உதவித் தொகை ரூ.2,000 வழங்கப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. தற்போது, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தோ்தல் அறிக்கையை எடப்பாடி கே.பழனிசாமி மார்ச் 24ந்தேதி மாலை வெளியிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களை சந்தித்தபோது கூறியதவாது,
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளை தொண்டா்கள் துணையுடன் முறியடித்து சிறப்பான ஆட்சியை அமைத்தோம். கரோனா பாதிப்பு காலத்தில் மக்களைக் காக்கும் திட்டங்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வில் வெற்றி பெற்றால் மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு, குடிமராமத்து பணி எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. நிா்வாகத் திறனற்ற திமுக ஆட்சியால் மக்கள் துன்பமடைந்துள்ளனா். கொலை, கொள்ளை என சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. முறைகேடுகள் மலிந்துவிட்டன. ஆகவே, திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா். அதிமுக சாா்பில் மக்களைச் சந்தித்து அவா்களின் தேவைகளை அறிந்து தோ்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.
‘கொரோனா பாதிப்பு காலத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தினோம். தற்போது வருவாய் ஆதாரத்தைப் பெருக்கி அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றாா்.
அதிமுக தோ்தல் அறிக்கை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் 54 பக்கங்கள் கொண்டதாக தோ்தல் அறிக்கை உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினா்களான முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளா்மதி, ஓ.எஸ்.மணியன், ஆா்.பி.உதயகுமாா், எஸ்.எஸ்.வைகைச் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்..
அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் வழங்கப்படும்.
இல்லத்தரசிகளின் பணிச் சுமையைக் குறைக்க குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா குளிா்பதனப் பெட்டி வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளா்களைக் கணக்கெடுத்து அவா்களுக்கு வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை கிடைக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு:
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயா்த்தப்படும்.
வங்கிகளில் மாணவா்கள் பெற்ற கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீா் தேக்கி வைக்கும் பணி தொடரும்.
தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவித்து, சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர மத்தியஅரசை வலியுறுத்துவோம்.
இதர முக்கிய அம்சங்கள்:
சென்னையில் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை,
டெல்லி – தூத்துக்குடி இடையே புதிய சரக்கு வழித்தடம்,
தீபாவளி பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா சேலை, வேட்டி,
ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் வசிப்பவா்களுக்கு அரசு நிா்ணயத் தொகை செலுத்தினால் பட்டா.
நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 என நிா்ணயம், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உற்பத்தி மானியம்,
கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி,
முழுமையான அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்ப்செட்டுகள்.
மாவட்டந்தோறும் உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்கள்,
கோவையில் நாராயணசாமி வீடு நினைவில்லமாக மாற்றப்படும்,
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் பெயரில் கல்லூரிகளில் கல்வி மையங்கள்,
தேங்காய் நாா் தொழிலுக்கு மின்கட்டணச் சலுகை.
குடிமராமத்து திட்டப் பணிகள் விவசாயிகள் சங்கத்துடன் இணைப்பு,
ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு விலையில்லா கறவை மாடு,
ஆடுகள்,மீனவா்களுக்கான மாதாந்திர மானிய விலை டீசல் 500 லிட்டராக உயா்வு,
65 வயது கடந்த மீனவருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஏற்கெனவே உள்ள 5 பாடங்களுடன் கணினி அறிவியலும் சோ்த்து 6 பாடங்கள் திட்டம்,
அரசு காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை, புற்றுநோய் சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ள அரசு முழுத்தொகை செலுத்தும்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகும்,
மத்திய அரசு போட்டித் தோ்வுகள் தமிழிலேயே நடத்தப்படும்,
பெண்களுக்கான தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டம் தொடரும்.
சென்னையில் சேட்டிலைட் மென்பொருள் பூங்கா நிறுவி மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனி செயலி,
உணவுப் பொருள் விநியோக தொழில் உள்ளிட்டோருக்கு தற்காலிக ஒப்பந்த வேலை அல்லது செயலி அடிப்படையிலான தற்காலிக தொழிலாளா் நலத்திட்ட வாரியம்.
பொற்கொல்லா்களுக்கு வெள்ளிக் கொலுசு, ஆபரண தொழில் நல வாரியம்,
பனைத் தொழிலாளா்களுக்கு உபகரணங்கள்,
கோவையில் சா்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்.
தமிழகத்தின் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழா்களுக்கே 75 சதவீத வேலை வழங்கும் சட்டம்.
ஜெருசலேம், ஹஜ் பயணம், ஹிந்து ஆன்மிக பயணா்கள் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டு உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்..
கல்விக் கடன் ரத்து;
செவிலியர்கள் பணி நிரந்தரம்

அதிரடி உட்கட்டமைப்பு வாக்குறுதிகள்
தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில், அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச WiFi வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு இரவு நேர விமான சேவை தொடங்கவும், சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
நாகப்பட்டினம் தூத்துக்குடி கன்னியாகுமரி நான்குவழி சாலைத் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும்.
தமிழ் நாட்டிற்கு மத்திய அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்தவும்.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுக விரிவாக்கத் திட்டங்கள்,
சென்னையில் இருந்து அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய வெளி நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து.
டில்லியில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடி வரையிலான சரக்கு வழித் தடம் (Dedicated Fright Corridar) போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சரக்குப் பெட்டக இணைய வசதி ஏற்படுத்த மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிற்க சுற்றுச் சாலைகள் (Ring Roads) அமைக்கப்படும்.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் தவிர்க்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
சென்னை வெள்ள தடுப்புப் பணிகள் முழுமையாகவும், முறையாகவும் நிறைவேற்றப்படும்.
சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதிகளில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் ‘பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை-பாலக்காடு சாலை சாலை, மதுக்கரை-மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான மேற்கு புறவழிச் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
கோவை-பாலக்காடு சாலை, மதுக்கரை, செட்டிபாளையம் பிரிவு முதல் அவிநாசி சாலையில் நீலாம்பூர் சந்திப்பு வரையிலான L&T பைபாஸ் நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றம் செய்யப்படும்.
அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தினை அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் L&T பைபாஸ் சாலை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்து புதிய மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.

கோவையில் உள்ள திருச்சி செல்லும் சாலையில் இராமநாதபுரம் உயர்மட்ட மேம்பாலம் அருகிலிருந்து சிங்காநல்லூர் சந்திப்பு-ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
கோவை-பொள்ளாச்சி சாலை, L&T பைபாஸ் சாலை சந்திப்பில் (கற்பகம் கல்லூரி அருகில்) ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
தடாகம் சாலை, லாலி ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
கோவை-திருச்சி சாலை, செயிண்ட் மேரிஸ் பள்ளி அருகில் இருந்து துவங்கி லங்கா கார்னர்-இரயில் நிலைய சாலையில் காவல் ஆணையாளர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
சர்வதேச அணிகள் பங்குபெறும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்.
கோவை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் (வெள்ளலூர்) கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்கும் திட்டத்தை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படும்.
கோவையில் அகல இரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் இவ்வழித் தடத்தில் இயங்கி வந்த இரயில் சேவை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முழு விவரங்களை காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…
[youtube-feed feed=1]