சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதையடுத்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா பதவி வழங்கி கவுரவித்த திமுக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது. இதுதொடர்பாக, உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக . 21 கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கி உள்ளது. அதையடுத்து, ஒவ்வொரு கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஒரு மாதமாகவே திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததது. அதன்படி,
காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இரண்டு இலக்க தொகுதிகள் கேட்டு விசிக அடம்பிடித்து வந்த நிலையில், இறுதியில் 8 தொகுதிகளுக்கு பணிந்தது இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இந்த மதச்சார்பற்ற கூட்டணி 200 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிவித்தார். மேலும், தேமுதிக சார்பில் நாளை 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாகவும், அந்த குழுவை திமுக அழைத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தியபின், அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, 27-ம் தேதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 1-ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அன்றே தேமுதிகவும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் பிரேமலதா கூறினார்.
அதோடு, தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலை வழங்கியிருப்பதாகவும், அது குறித்து பேசி பட்டியல் இறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
