ராணிப்பேட்டை:  வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்  என ராணிப்பேட்டையில் நடைபெற்ற  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்  சீமான் ‘பஞ்ச்’ டயலாக் பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ள நாம் தமிழர் கட்சி, 234 தோகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதகளப்படுத்தி உள்ளது. அதன்படி,  234 தொகுதிகளுக்கும் தலா 117 ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் தாரிக்கா சல்மான், ஆற்காடு தொகுதி வேட்பாளர் அர்ச்சனா, சோளிங்கர் தொகுதி வேட்பாளர் அசோக்குமார், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோரை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  சீமான்,

“தமிழகத்தில் தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. ஆங்கில கல்வியே அறிவு என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது. தற்போதைய அரசியல் கட்சிகளால் மாற்றம் சாத்தியமில்லை; புரட்சியால் மட்டுமே மாற்றம் உருவாகும்” என்றார் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய அவர், ”மக்களுக்கான நலத்திட்டங்கள் பெயரில் பண உதவி வழங்கப்படுவது வளர்ச்சி அல்ல. மது விற்பனையை அதிகரிப்பதும் வளர்ச்சி இல்லை. உண்மையான வளர்ச்சி என்பது கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர் ”நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பேன், தரமான கல்வி மற்றும் உலகத் தரமான மருத்துவ சேவையை அனைவருக்கும் சமமாக வழங்குவேன். தூய குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உறுதியான ஆதரவு அளிப்பேன். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. அரசின் முன்னுரிமைகள் தவறாக உள்ளன. விவசாய உற்பத்திகளுக்கான சேமிப்பு வசதிகள் இல்லாமல், மழையில் பயிர்கள் வீணாகிறது.

தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை கிடைக்க வேண்டும். தமிழகத்தில் 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். பயந்தவன் கூட்டத்தை நம்புவான், வீரன் தனித்து நிற்பான்” .

இவ்வாறு பேசினார்,

[youtube-feed feed=1]