மதுரை:  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன்  காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டகொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.  குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 30ந்தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிவடைந்து  ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு மார்ச் 23ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. தீர்ப்பை வாசித்தத உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட  9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும்,  குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனோ ஊரடங்கின்போது, சாத்தான்குளம் பகுதியில்,  கடையை அடைப்பது தொடர்பாக தந்தை, மகன் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  தொடர்ந்து, இருவரும் நீதிமன்றக் காவலில் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக,  கடந்த 2020 ஜூன் 22-ம் தேதி, மகன் பென்னிக்ஸும், அதற்கு அடுத்த நாள் தந்தை ஜெயராஜும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதையடுத்து, காவல்துறை கஸ்டடியில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடுர தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அந்த பகுதியில் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றம் உருவானது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால், நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த கொலை வழக்கை விசாரித்த சிபிஐ,  அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 10 பேர் கைது செய்து சிறையில் அடைத்தது.   குற்றம்சாட்டப்பட்ட போலீசாருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையில், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீசார், வழக்கு விசாரணைக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

 இதற்கிடையே, வழக்கில் தன்னை அப்ரூவராக மாற அனுமதிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையை தாமதம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் மனுத் தாக்கல் செய்திருப்பதாக சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில்,  இந்த வழக்கில் தொடர்புடைய  காவலர் பால்துரை கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து, இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது.

இந்த வழக்கில்,  தந்தை, மகன் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்தபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில்  நீதிமன்றம் 2026ம் ஆண்டு மார்ச் 23ந்தேதி அன்று மாலை அதிரடி தீர்ப்பு  வழங்கியதுரு. . உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி முத்துக்குமரன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்களில் ஏற்பட்ட காயங்கள், போலீசார் அடித்ததால் ஏற்பட்டவைதான் என்பது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டார். மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என அவர் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 30ந்தேதி அறிவிப்பதாக கூறினார்.

[youtube-feed feed=1]