சென்னை : நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என ANS நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும்.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி, அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,69,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில், 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.. நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. ஓட்டுச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் 15ந்தேதி மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், த வெக மற்றும் சசிகலா ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபறக்கிறது.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெறப்போது யார் என்பது குறித்து பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, ANS நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏஎன்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில், பிப்7 முதல் மார்ச் 12 வரை பொதுமக்களை சந்தித்து கருத்துகணிப்பு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வயது வாரியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் திமுக 44.1 சதவீதம் வாக்குகள் பெறும். அதிமுக 38.5 சதவீத வாக்குகள் பெறும். தற்போதைய நிலையில் அதிமுகவைவிட திமுக கூட்டணி 6.4% வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறும் என்று தெரிவித்ததுடன், திமுக கூட்டணி 44.9% வாக்குகளைப் பெறும், அதாவது சுமார் 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு முதலே பெண்கள் வாக்குகள் திமுகவுக்கு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்தனர்.
தங்களது கருத்து கணிப்பின் மூலம், திமுக கூட்டணியின் வெற்றி தெளிவாக உள்ளது. 180 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். எதிர்க்கட்சியான 54 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்.
தவெக என்பது ஒரு மாய உலகம் போல்தான் உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டும் தவெகவுக்கு ஆங்காங்கே வாக்குகள் உள்ளன. சென்னை மாநகரில் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் தவெகவை நோக்கி நகர்கின்றன. வேளச்சேரியில் தவெகவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோற்பார் என சரியாக கணித்தோம். அதுவே நடைபெற்றது. கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அக்கட்சி இப்போது வெற்றி பெறும் சூழல் உள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும்.
மேற்கு மாவட்டங்களில் கடந்த முறை அதிமுக அதிக இடங்களில் வென்றது. இந்த முறை திமுக கணிசமாக வெல்லும்.
மேற்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் 32ல் திமுக, 18 இடங்களில் அதிமுக வெற்றி பெறும்.
தெற்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் திமுக 42, அதிமுக 16ல் வெல்ல வாய்ப்பு உள்ளது.
மத்திய மண்டலத்தில் 37 தொகுதிகளில 35 இடங்களில் திமுக, 2 இடங்களில் அதிமுக வெற்றி பெறும்.
வடக்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் 35 தொகுதிகளில் திமுக, 17 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்
இவ்வாறு கூறினர்.