புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள  30 தொகுதிகளிலும் தி.மு.க, காங். தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே  தொகுதிப் பங்கீட்டில்  தொடரும்  இழுபறியால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 9ம் தேதியே புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த மாநிலத்தில் 9.48 லட்சம் வாக்காளர்கள் அங்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர. இவர்களில்  5.03 லட்சம் பெண்கள், 4.45 லட்சம் ஆண்கள். மாநிலத்தில்,  ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டு முனை போட்டி அங்கு நிலவி வரும் சூழலில் இந்தமுறை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. இதனால் மும்முனை போட்டி நிலவி வந்தது.

ஆனால்,  இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கூட்ணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.  மார்ச் 22நதேதி  நள்ளிரவு வரை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் 16 தொகுதிகளையும், திமுக 12 தொகுதிகளையும் பகிர்ந்து கொள்வது எனத் திட்டமிடப்பட்டது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இருந்தாலும்,  தி.மு.க வெற்றிபெற வாய்ப்புள்ள முக்கியத் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடித்தது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தான் போட்டியிட விரும்பிய நெல்லித்தோப்பு தொகுதியை தி.மு.க விட்டுக்கொடுக்காததால் அதிருப்தி அடைந்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இதையடுத்து,  இரு கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், கால அவகாசம் இல்லாததை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளன. அதன்படி, புதுச்சேரியின் அனைத்து 30 தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்னும் கூடுதல் நாட்கள் இருப்பதால், அதற்குள் சுமுகமான உடன்பாட்டை எட்டி, இறுதி முடிவை அறிவிக்க இரு கட்சித் தலைமைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

[youtube-feed feed=1]