சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, “அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

‘சமூக வலைதளங்களில், ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அரசியல் கட்சிகள், அமைப்புகள் அல்லது வேட்பாளர்கள் தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் உள்ள டிஜிட்டல் திரைகள், இ-பேப்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) கட்டாயம் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக மொத்த மெசேஜ் (Bulk SMS) மற்றும் வாய்ஸ் மெசேஜ்களுக்கும் இந்த விதி பொருந்தும். மாவட்ட அளவில், வேட்பாளர்கள் மற்றும் தனிநபர்கள் அந்தந்த மாவட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசியவர், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம், முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு, குறைந்தது மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட, அனைத்து வீடியோக்களிலும், ஏ.ஐ., வாயிலாக உருவாக்கப் பட்டது, டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது, செயற்கை உள்ளடக்கம் போன்ற தெளிவான லேபிள்கள் இருக்க வேண்டும்.

ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய உள்ளடக்கங்கள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின், சமூக வலைதள பக்கங்களில், இத்தகைய தவறான அல்லது சட்ட விரோத வீடியோக்கள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, அவர்கள் பயன்படுத்தும் அனைத்து அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளின் (Facebook, X, Instagram போன்றவை) விவரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் சார்ந்த எந்தவொரு விளம்பரமும் சான்றிதழ் இன்றி வெளியிடப்படக் கூடாது என்பதில் ஆணையம் மிகத் தெளிவாக உள்ளது.

செய்தி ஊடகங்களில் ‘காசு கொடுத்துச் செய்தி’ (Paid News) வெளியிடும் முறையைத் தடுக்க ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். தேர்தல் முடிந்து 75 நாட்களுக்குள், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் செலவு செய்த தொகையை அரசியல் கட்சிகள் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில் இணைய நிறுவனங்களுக்குக் கொடுத்த பணம் மட்டுமின்றி, டிஜிட்டல் உள்ளடக்கத்தை (Content) உருவாக்கவும், கணக்குகளைப் பராமரிக்கவும் செய்யப்பட்ட செலவுகளும் அடங்கும்.

மார்ச் 19 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களின் (Social Media Platforms) பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் தேர்தல் நேரத்தில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை உடனுக்குடன் கண்டறிந்து நீக்க கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும்,   தமிழகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான, ஆண்டு ஊதியம் 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக எஸ்.ஐ.ஆர்., பணிக்கு 2,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதி சங்க வளாகங்களில், தேர்தல் கமிஷன் ஓட்டுச்சாவடிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் ஐந்து, திருவள்ளூரில் நான்கு, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா இரண்டு, மதுரையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு என, 14 இடங்களில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]