சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த எஇறுதி முடிவு 4 நாள்களுக்குள் தெரியவரும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது.. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை வழங்கியதுடன், மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டும், கட்சி உறுப்பினர்கள் மூலம் தேர்தல் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்து களமிறங்குவதுடன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. புத்தாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், அக்கட்சியும் தனித்து களமிறங்குகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கிடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை பல முறை டெல்லியில் சந்தித்து பேசி வருகிறார்.
நேற்று முன்தினமும் (மார்ச் 19) டெல்லி சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் அமித் ஷாவை இன்று சந்திக்கின்றனர்.அமித்ஷாவை சந்தித்த பின்னர், டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நான்கு நாள்களுக்குள் வெளியிடப்படும்.
எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. யார் யாருக்கு எந்ததெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அதனடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் 31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி. அதிமுக விரைவு ரயில் போல வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரதமர் மோடி மூன்று முறை தமிழகத்துக்கு வந்திருக்கிறார். பிரதமர் மோடி தலைமையில், மதுரை, மதுராந்தகம், திருச்சி என மூன்று இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மீண்டும் பிரதமர் மோடி, விரைவில் தமிழ்நாட்டு வரவிருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்துவிட்டன. இனி தேர்தலை நோக்கி விரைவாகப் பயணிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்..
[youtube-feed feed=1]