சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மேலும் 5 துறைகளை சேர்ந்த தேர்தல் பணியாளர்களும் தபால் வாக்கு செலுத்த தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. புதிதாக கட்சியை தொடங்கி உள்ள விஜயின் தவெக, திராவிட கட்சிகளுக்கு போட்டியாக உள்ளது. இதனால் அரசியல் களம் தகதகவென தகிக்கத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார். மேலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, தேர்தல் அலுவலர்கள் உரியப் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அங்கு ஒரு தற்காலிக வாக்குச்சாவடி அமைப்பை ஏற்படுத்தி, ரகசியம் காக்கப்படும் வகையில் அவர்கள் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.
இந்த நடைமுறை மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஜனநாயகக் கடமையாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் சமயத்தில் அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் உரிமை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தபால் வாக்கு செலுத்த மேலும் 5 அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் தபால் வாக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் (PwD), சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வசதி செய்கிறது.
1. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் இடைத் தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது. அட்டவணையின்படி மார்ச் 16, 2026 அன்று அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 60(c)-ன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் (PwDs) என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்கைச் செலுத்தலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
3. இத்தகைய வாக்காளர்கள் படிவம் 12D (Form 12 D)-ஐப் பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) சமர்ப்பிக்க வேண்டும். வாக்குச் சேகரிக்கும் குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளைச் சேகரிப்பார்கள். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.
4. தேர்தல் தேதியன்று அத்தியாவசியப் பணிகளில் (Essential services) இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer) மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்புத் துறை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் போன்றவை இந்த வசதியின் கீழ் வருகின்றன.
5. தேர்தல் நாள் செய்திக் சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள ‘வராத வாக்காளர்கள்’ (Absentee voters) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களும் தபால் வாக்கு வசதிக்குத் தகுதியுடையவர்கள்.
6. தேர்தல் பணியில் இருக்கும் ஒரு வாக்காளர் தனது தபால் வாக்கைப் பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, வசதி மையத்தில் (Facilitation center) சமர்ப்பிக்க வேண்டும். வசதி மையத்தில் வாக்காளர் முழுமையான ரகசியத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
7. சேவை வாக்காளர்களுக்கு (Service voters) தபால் வாக்குகள் மின்னணு முறையில் அனுப்பப்படும் (ETPBS – Electronically Transmitted Postal Ballot System). வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் இவை அனுப்பப்படும். இதற்கான தபால் செலவை சேவை வாக்காளர்கள் ஏற்க வேண்டியதில்லை.
8. பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4, 2026 அன்று காலை 8:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை (ROs) சென்றடைய வேண்டும்.
9. தேர்தல் நடத்தும் அலுவலர் (RO)/மாவட்ட தேர்தல் அலுவலர் (DEO) மேற்கண்ட விதிகள் குறித்து அரசியல் கட்சிகள்/போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.”
[youtube-feed feed=1]