சென்னை: அரசு பணிகளில் பணியாற்றி பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் 4 மாதம் அரசு விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை  வெளியிட்டு உள்ளது.

அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி, அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 மாதம் விடுப்பு வழங்க முன்வந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, 2016ம் ஆண்டு அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதங்களாக உயர்த்தி அறிவித்தார். முன்னதாக,  தமிழ்நாட்டில்  1980-ம் ஆண்டு முதல்  மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் மட்டுமே இருந்து வந்தது. பின்னர்,   கடந்த  2011-ம் ஆண்டு முதல் 6 மாதங்களாக தொடர்ந்து. கடந்த  2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  ஜெயலலிதா மகப்பேறு விடுப்பை  9 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின், 9 மாதங்களாக (270 நாட்கள்) இருந்த பேறுகால விடுப்பை கடந்த 2021-ம் ஆண்டு முதல் 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி அறிவித்தது..கருச்சிதைவு அல்லது சட்டபூர்வமான கருக்கலைப்பு நிகழ்வுகளில், மருத்துவச் சான்றிதழுடன் 6 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படலாம்.

இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும், பி.மங்கையர்க்கரசி என்பவர் தனது 3-வது பிரசவத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தமிழக அரசின் விதிகளின்படி, 2  குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதி இல்லை என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, தமிழகத்தில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், 3-வது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என்றும் பெண் ஊழியர்கள் தங்கள் 3வது பிரசவத்திற்கும், சம்பளத்துடன் கூடிய முழுமையான பேறுகால விடுப்பை பெற தகுதி உடையவர்கள் என்று உத்தரவிட்டது.

மகப்பேறு நலன் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பை கருத்தில் கொண்டு, இந்த விடுப்பு மறுக்கப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு பெண் ஊழியரும் இதற்காக நீதிமன்றத்தை நாடக்கூடாது என்றும், இந்த தீர்ப்பின் நகலை தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர். 2026  ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்களுக்கு 12 வாரங்களுக்கு (அதாவது 3 மாதங்கள்)  மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]