சென்னை: சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில், திருமுருகன் காந்தியுடன், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும். இனி ஒரு உயிரும் போகக் கூடாது; தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்.

மார்ச் 11ம் தேதி சென்னையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி தலைமையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் மாநில மொழியுடன் இந்தியுடம் இடம்பெற்றுள்ளது. இதை கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாத திருமுருகன் காந்தி, தற்போது தேர்தல் அரசியலுக்காக சிலரை கூட்டிக்கொண்டு ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து வருகிறார். அவரது செயல் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம், பார்க் ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் கூடிய மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமையில், இந்தியை திணிக்காதே, தமிழை அழிக்காதே, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என பல்வேறு முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பூங்கா ரயில் நிலையம் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயின்ட் ஸ்ப்ரே மூலம் அழித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த மே 17 இயக்க நிர்வாகியான சிவா திலீபன் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என கோஷமிட்டு கொண்டே தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் முன் பாய்ந்தார்.
இதில் தலை மற்றும் கை, கால்களில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை மீட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 6 நாட்கள் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிவா திலீபன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு மே 17 இயக்கத்தினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! சகோதரர் சிவா திலீபன் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும். இனி ஒரு உயிரும் போகக் கூடாது. தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம். நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]