சென்னை:  கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்டில் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு  சுகாதாரத் துறை செயலர் பி. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில்,  கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு முதல் ‘எம்.ஃபில். கிளினிக்கல் சைக்காலஜி’ படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புக்கு பதிலாக ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற பெயரில் புதிய படிப்பை வழங்குமாறு இந்திய மறுவாழ்வுக் கவுன்சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை அறிவுறுத்தியுள்ளது.

அதன் பேரில், ஆண்டுதோறும் 18 மாணவர்களை சேர்க்கும் வகையில், 2026-2027 கல்வி ஆண்டில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்குமாறு, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மூலமாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இயக்குநரின் கருத்துரு அரசுக்கு வரப்பெற்றது. அக்கருத்துருவை ஏற்று, 2026-2027 கல்வி ஆண்டில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்கவும், ஆண்டுதோறும் 18 மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கிறது.

இப்புதிய படிப்புக்கு இந்திய மறுவாழ்வுக் கவுன்சிலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திடமும் உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]