சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை காங்கிரஸ் உள்பட 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி மார்ச் 15ந்தேதி அன்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையொட்டி, தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் நாதக, தவெக என 4 முனை போட்டிகிள் உருவாகி உள்ளன.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் மொத்தம் 23 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உறுப்பினர்கள் – கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் – அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் – எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து வரும் நிலையில், இதுவரை திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.
அதன் விவரம் வருமாறு :
- காங்கிரஸ் – 28 தொகுதிகள்
- ம.தி.மு.க. – 4
- இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி – 2 தொகுதிகள்
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2 தொகுதிகள்
- மனிதநேய மக்கள் கட்சி – 2 தொகுதிகள்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மதிமுக 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 2 தொகுதிகள் என 7 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது ஓரிரு நாளில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என அறிவாலயம் வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன.
[youtube-feed feed=1]