சென்னை: பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல  இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வைரமுத்துவை ‘கீழ்த்தரக் கவிஞர்’ என்றும் ‘சிறுமையாளர்’ என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ள ஜெயமோகன், அதிகார பீடங்கள் தமிழைச் சிறுமைப்படுத்தினாலும், தரமான படைப்பாளிகளை முன்னிறுத்தும் முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ளார். “வைரமுத்து போன்ற சூழ்ச்சியாளர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் இலக்கியம் என்றும் வெல்லும்” என்று அவர் தனது பதிவை முடித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, கள்ளிக்காட்டு இதிகாசம்நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது.

கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

 “தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது. காலையில்தான் வைரமுத்துவை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது. தமிழில் இதுவரையில் அகிலனும், ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் வைரமுத்துவின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று வைரமுத்துவை வாழ்த்துகிறேன், அவரை தமிழ்நாடே வாழ்த்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன்

இந்த நிலையில், ஞான பீட விருது பெற உள்ள கவிஞர் வைரமுத்துவை,  எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்., அதிகார பீடங்கள் இத்தகைய சூழ்ச்சிகள் மூலம் தமிழைத் தொடர்ந்து அவமதித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரைகள், பண்பாடு, மரபு, மதம், தத்துவம், என பல தளங்களில் எழுதி வருகிறார். இலக்கியம், தத்துவம், மதம், மரபு என பல தலைப்புகளில் பேருரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதி வருகிறார். திரைத்துறையில் பணியாற்றுகிறார்.

ஜெயமோகன் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு எழுத்தாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் பற்றிய கருத்தரங்கு கள், எழுத்து, வாசிப்பு, விவாதம் பற்றிய பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி வருகிறது. மேலும்,  ஜெயமோகன் குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகளைப் பெற்றவர். தக்ஷசிலா பல்கலை, திண்டிவனம் வழங்கும் மதிப்புறுமுனைவர் பட்டம் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை, இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வைரமுத்து ஒரே நேரத்தில் தி.மு.க.விற்கு நெருக்கமானவராகவும், அதேசமயம் பா.ஜ.கவின் கலாச்சார முகவர்களுடனும் அணுக்கமாகச் செயல்படுவதாகவும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர்.

வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது. பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு.

ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

இந்திய  துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்தி ருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம்.

நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர்.

அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.

இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம்  ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன்.

தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே.

வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.

இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்க வேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது.

வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில்.

ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.

– ஜெயமோகன், எழுத்தாளர்

இவ்வாறு கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]