சென்னை: தமிழ்நாட்டுக்கு “நவோதயா பள்ளிகள்தேவையில்லை…”எங்கள் மாதிரிப் பள்ளிகளே போதும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஜவஹர் நவோதயா வித்யாலயா (ஜே.என்.வி) திட்டம் தமிழகத்தின் சட்டப்பூர்வ இருமொழி கொள்கைக்கு முரணாக இருப்பதாகவும், அதன் தற்போதைய வடிவத்தில் அதனை மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக, மாநில அரசின் தற்போதைய ‘மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு’ மத்திய அரசு நிதியுதவி வழங்கலாம் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

“இருமொழி கொள்கையில் சமரசம் கிடையாது” எனவும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தின் கல்வி மற்றும் மொழிச் சட்டங்களுக்கு முரணானவை எனவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மும்மொழி கொள்கையை எதிர்க்கும் அதே வேளையில், மாநில அரசின் மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

“ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டத்தின் அடிப்படையான ‘மும்மொழி கொள்கை’, தமிழக அரசு பின்பற்றும் ‘இருமொழி கொள்கைக்கு’ முற்றிலும் எதிரானது. இத்திட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் செயல்படுத்துவது, 2006-ம் ஆண்டின் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தை’ மீறுவதாக அமையும். இத்தகைய மீறல் சட்டப்படி அனுமதிக்க முடியாதது மற்றும் மாநிலத்தின் சட்டமன்றக் கட்டமைப்பிற்கு எதிரானது” என்று தனது பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்தாலும், ஒரு மாநிலத்தில் தேசியத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அந்த மாநிலத்தின் நடைமுறையில் உள்ள சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு இணங்க அவை இருக்க வேண்டும் என்றம் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 15, 2025-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நவோதயா பள்ளிகள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசித்து அதன் முடிவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, தமிழக அரசின் இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 05, 2026-ல் மத்திய – மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு தனது அரசியல் சாசன மற்றும் சட்டப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் இருமொழி கொள்கை 1968-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உருவானது என்றும், 2006-ம் ஆண்டின் சட்டத்தின் மூலம் அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சட்டத்தின்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாய பாடங்களாகும்; மூன்றாவது மொழி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், நவோதயா பள்ளிகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி ஆகிய மூன்றையும் கட்டாயமாக்குகின்றன. இது தமிழகத்தின் கொள்கையுடன் நேரடியாக மோதுகிறது.

மேலும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்குவதே நவோதயா பள்ளிகளின் நோக்கம் என்றால், அந்த நோக்கத்தை மாநில அரசு ஏற்கனவே தனது பள்ளிகள் மூலம் நிறைவேற்றி வருகிறது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று என மொத்தம் 38 மாதிரி உறைவிடப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு பள்ளியும் சுமார் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இப்பள்ளிகளைப் பராமரிக்க ரூ.210 கோடி செலவிடப்படுகிறது, இதனை மாநில அரசே முழுமையாக ஏற்கிறது.

2024–25 கல்வியாண்டில் மட்டும் இப்பள்ளிகளில் பயின்ற 1,340 மாணவர்கள் இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்; பலர் வெளிநாட்டு கல்வி உதவித்தொகைகளையும் பெற்றுள்ளனர். எனவே, புதிய பள்ளிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள மாநில அரசின் உறைவிடப் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதே ஆலோசனைக் கூட்டத்தில், ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் தமிழக அரசு கோரியுள்ளது.

2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளுக்குச் சேர்த்து ரூ.3,998.82 கோடி வர வேண்டிய நிலையில், வெறும் ரூ.450.60 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.

[youtube-feed feed=1]