திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள், அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
திருச்சிராப்பள்ளியில் தமிழகத்தின் எரிசக்தி, சாலை மற்றும் ரயில்வே துறைகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்கத் தொடங்கி உள்ளது. இந்த சூழலில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தருகிறார்.
மார்ச் 11-ம் தேதி திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஊரகச் சாலைகள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எரிசக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பிற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்குக் குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும், 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்கப்படுவதோடு, 201-க்கும் அதிகமான சி.என்.ஜி நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இது அப்பகுதி மக்களின் எரிசக்தித் தேவையை எளிமையாக்குவதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.
அதேபோல், சென்னை மணலியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.1,490 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள லூப்ரிகண்ட் கலவை ஆலையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலை, இந்தியாவின் லூப்ரிகண்ட் உற்பத்தித் திறனைப் பெருமளவு வலுப்படுத்தும்.
போக்குவரத்து மற்றும் ஊரக மேம்பாட்டைப் பொறுத்தவரை, பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புறச் சாலைகளைப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
இந்தச் சாலைகள் கிராமப்புற மக்கள் சந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை எளிதில் சென்றடையப் பெரிதும் உதவும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை 81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமையவுள்ள பசுமை வழி புறவழிச்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ரயில்வே துறையில் பயணிகளின் வசதிக்காக இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ரயில் சேவைகள் தமிழகத்தைப் பிற மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுமக்களின் தடையற்ற பயணத்திற்கும் வழிவகுக்கும்.
[youtube-feed feed=1]