சென்னை: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 1027 வாக்குச்சாவடிகள் பதற்றமானit என பெருநகர சென்னை மாநகர காவல்துறை கண்டறிந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும். . அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்து களமிறங்குவதுடன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கி தேசிய மற்றும் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக கட்சி தொடங்கி களத்தில் இறங்கி உள்ள விஜயின் தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், அக்கட்சியும் தனித்து களமிறங்குகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் துப்பாக்கி உரிமம் உள்ளவர்கள் அதை உடனே காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் சரண்டர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையிலும் ரவுடிகள் பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்தை அதிகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காவல்ஆணையர் அருண், சென்னையில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள 2,336 பேரில் 70% பேர் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தலுக்காக தற்போது வரை 56 பறக்கும் படைகள், 56 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]