தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில், பல நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்த சர்வதேச நகரத்தில் ஆரோவில் பவுண்டேஷனுக்குச் சொந்தமாக 3,300 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதன் செயலாளராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

ஆரோவில் பவுண்டேஷனின் நிர்வாகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்குள்ள நிலம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களைத் தமிழ்நாடு அரசே கவனித்து வருகிறது.

இந்த நிலையில் ஆரோவில் பகுதிக்குச் சொந்தமான நிலங்களைப் பரிவர்த்தனை என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி, பவுண்டேஷன் பொறுப்பில் இருப்பவர்கள் பலனடைந்து வருவதாக ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அருண் அம்பதி, பிரபு மற்றும் பாலமுருகன் ஆகியோர் நேற்று பொதுமக்களுடன் வந்து விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தனித்தனியே மூன்று புகார் மனுக்களை அளித்தனர்.

“ஆரோவில் பவுண்டேஷனுக்குச் சொந்தமாக 3,300 ஏக்கர் நிலம் உள்ளது. ஒரு சில நிலங்கள் தேவையில்லை என்று இவர்களே முடிவெடுத்து, அவற்றைத் தனியாருக்கு விற்பனை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக மாற்று இடங்களை வாங்கிக்கொள்கின்றனர்.

தற்போது 16 ஏக்கர் நிலப் பரிவர்த்தனை தொடர்பாகப் புகார் அளித்துள்ளோம். பல கோடி மதிப்புள்ள நிலத்தைத் தனிநபரிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒதுக்குப்புறமாக உள்ள குறைந்த மதிப்புள்ள நிலத்தைப் பெற்று ஊழல் செய்துள்ளனர்.”

மேலும், இந்த ஊழல் குறித்துக் கேள்வி கேட்டால் இணையதளத் துண்டிப்பு போன்ற சித்திரவதைகளுக்கு ஆளாவதாக செய்தியாளர்களிடம் பேசிய அருண் அம்பதி கூறியுள்ளார்.

“ஆரோவில் பகுதியில் நிலத்தை விற்பனை செய்ய அனுமதியில்லை. 2021-இல் பதவியேற்ற இவர்கள், ஆரோவில் வளர்ச்சிக்கு ஏதும் செய்யாமல் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனர். இதனால் அரசுக்குச் சுமார் 350 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பவுண்டேஷனிடம் இருந்து ஒரு சதுர அடி 16 ரூபாய்க்கு வாங்கி, 6,000 ரூபாய்க்கு பிளாட் போட்டு விற்கிறார்கள். இது 2023 முதல் நடந்து வருகிறது,” என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

“ஆரோவில் பவுண்டேஷனில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஜெயந்தி ஐஏஎஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று எஸ்பியிடம் கோரியுள்ளோம். 6 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்துள்ளார்” என்றும் தெரிவித்தனர்.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 16 ஏக்கர் நிலத்தில், அதிமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஏக்கரும், மற்ற இருவருக்கு முறையே 3.5 ஏக்கர் மற்றும் 2.5 ஏக்கர் நிலமும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலாக, அவர்கள் மிகக் குறைந்த மதிப்புள்ள இடங்களையே பவுண்டேஷனுக்கு மாற்றிக் கொடுத்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]