சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். மேலும் துறை வாரியாக அரசின் சாதனைகளை அமைச்சர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தொடர்ந்து, உங்க கனவ சொல்லுங்க புதுமையான திட்டம் குறித்து சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 6.3.2026 அன்று காலையில் பொதுமக்கள், பத்திரிகை, ஊடக வல்லுநர்கள் சான்றோர்கள் கருத்துகள் மீது கலந்துரையாடல்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் ‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி தமிழ்நாடு முழுவதிலும் மக்களை சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்பை கனவை கேட்டுத்தெரிந்து பதிவு செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, மாநிலம் முழுவதும் 45 நாட்கள் 50,000 தன்னார்வலர்கள் 1.92 கோடி குடும்பங்களின் எதிர்கால கனவுகளை அறிவதற்காக, வீடுவீடாக சென்றனர்.
அப்பொழுது பொதுமக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், அவர்களின் எதிர்பார்ப்புகள், எதிர்கால கனவுகள் ஆகியவை குறித்தும் கேட்டு அறிந்து பதிவு செய்துள்ளனர். 10 லட்சம் இளைய சக்திகளின் என் கனவு என் எதிர்காலம் என்னும் நோக்கில் செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அயலகத் தமிழர்களின் கனவுகளும் திரட்டப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் நிறைவாக ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில், இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டு மக்களின் கனவுகள் அனைத்தும் 2030ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது
இந்த சிறப்பு நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நாளிதழ்களின் பதிப்பாளர்கள், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், முக்கிய சமூக ஊடகவியலாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், திரையுலக மக்கள், முதன்மை கல்வியாளர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், கலை, பண்பாடு, இலக்கியம் சார்ந்த ஆளுமைகள், சாதனை இளைஞர்கள் ஆகியோரும் பங்கேற்று, தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர்.
* உங்கள் கனவை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை இன்று அறிவிக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில், ‘‘உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லிவிட்டீர்கள். திராவிட மாடல் 2.0-வில் 2030-க்குள் அவற்றை எப்படி செயல்படுத்தப் போகிறோம் எனும் அறிவிப்புகளைத் துறை வாரியாக இன்று காலை வெளியிடுகிறேன்’’ என கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]