காரைக்கால்: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, சனி பகவான் இன்று காலை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி திருநள்ளாரில் விசேஷ பூசைகள் நடைபெற்று வருகிறது இதை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று காலை (மார்ச் 6 வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
திருநள்ளாறு (Thirunallar) புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள, மிகவும் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் (சிவன்) மற்றும் சனீஸ்வரர் கோவில் ஸ்தலம் ஆகும். இது நவக்கிரகத் தலங்களில் சனி பகவானுக்கு உரிய தலமாகவும், ஏழரைச் சனி மற்றும் அஷ்டமத்துச் சனி தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது.
இந்த உன்மத்த நடனமாடும் செண்பக தியாகராஜர் அருள்பாலிக்கும் தலமாகவும், நளச்சக்கரவர்த்திக்கு விமோசனம் கிடைத்த தலமாகவும் என பல்வேறு சிறப்புகளுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் இந்த தலம் அமைந்துள்ளது.
தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது. சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்திற்கு வந்த நளத்தீர்த்தில் நீராடி சனிபகவானை வேண்டினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவான் இந்த தலத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான், அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பார்வையில், அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
இந்த கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ள சனிபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா நாளில் விமரிசையான அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பிரவேசிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில், மங்கள வாத்தியங்கள் இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர்களால் மாலை சாத்தப்பட்டு, தங்க அங்கியுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.
தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர். பிறகு சனீஸ்வரபகவானை தரிசிக்க கோயிலுக்கு சென்றுகொண்டிருக்கிறனர். பக்தர்கள் கூட்டம் ஒரு மைல்தூரம் வரை நீண்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
[youtube-feed feed=1]